Friday, 23 August 2013

என் கவிதைகள்...

அரும்புவதும்,உதிர்வதும்... by shyamala.
நினைவில் நிற்கும் முதல் காதல்..
உள்ளங்கள் ஒன்றுபட்டு நிற்கும் முதல் காதல்...!!!
இப்போதும் நினைவிருக்கிறது...
அவளிடம் என் காதலை சொல்லாமல் சொன்னது..
அவள் தெரிந்தும் தெரியாமல் எனைக் கடந்தது..
இப்போதும் நினைவில் இருக்கிறது...
கடந்த அந்த விழியில் காதல் கொஞ்சாமல் கொஞ்சியது...
கொஞ்சிய நெஞ்சம் அன்பில் தவிக்காமல் தவித்தது...
அன்பில் தவித்த என்னை அவள் பார்த்த பார்வையில் 
காதல் பட்டுத் தெறித்தது 
மத்தளம் கொட்டிய மனசு மங்கை அவளை 
வாழ்க்கை இணையாக ஏற்காமல் ஏற்றது..
இணைந்த இரு நெஞ்சங்கள் 
கொஞ்சாமல் கொஞ்சின..
சேராமல் சேர்ந்தன..
கவிதையான வாழ்க்கையை வாழாமல் வாழ்ந்தன..
வாழ்ந்த அர்த்தம் குட்டி கவிதைகளாய் விளையாமல் விளைந்தன..
விட்டுக் கொடுக்காமல் விட்டுக் கொடுத்தான் 
தன் இணையின் அன்பை குட்டிக் கவிதைகளுக்கும்...
காதல் கணவனிடம் இணைந்த அவளும் 
முத்துச் சிதறல்களை விட்டுக் கொடுக்காமல் கொடுத்து 
குடும்பமெனும் முத்துமாலையை கோர்க்காமல் கோர்த்து எடுத்தாள் ....

ஆயிற்று ஆண்டுகள் பல 
வாழ்ந்த வாழ்க்கையின் பலன் புரியாமல் புரிந்தது...
மனதில் அதே இளமை சம்மணமிட்டு அமர்ந்திருக்க 
தேகத்தில் முதுமையின் ரேகைகள் தெரியாமல் தெரிந்தன..
அத்தனையும் அனுபவத்தின் அடையாளங்கள் 
என சொல்லாமல் சொல்லின..
இணையை விட்டு ஒரு நாள் போகத்தான் வேண்டும் 
என காலம் உணர்த்தாமல் உணர்த்தியது..
பிரிந்தாலும் மீண்டும் சேர்வோம் என பேதை உள்ளங்கள் 
நம்பாமல் நம்பியது ....
ஆகட்டும்..நம்பிக்கைதானே வாழ்க்கை...!



பெரு வாழ்வு!!!!


மழைச்சாரலின் அந்திநேரம்

மல்லிகை வாசம்

மயங்கிய மனது

எங்கோ மிதந்து வரும்

மனதுக்கு பிடித்த பாடல்

காதலின் கைப்பிடித்து

விடிய விடிய

கதைகள் பல பேசினேன்.....

சட்டென்று கலைந்தது கனவு.

விடிந்து விட்டது நினைவுக்கு வந்ததும்

சமையலறைக்குள் தாவியது மனசு

மறுபடியும் மறுபடியும்

வந்துகொண்டுதான் இருக்கின்றன

அதே கனவுகளைச் சுமந்த இரவுகள்.

அவளுக்கென்ன நன்றாகத்தான்

சீரும் சிறப்புமாக வாழ்கிறாள்

ஊர் சொன்னது! -   சியாமளா



பயணம் !


தொடரும் பயணங்களில் மீண்டும் மீண்டும் சந்திக்க நேருகிறது
சில அபூர்வ தருணங்களை..
நதிப் பாலங்களின் மீது ரயில் நின்று விடும் 
தூரத்தில்
நீண்டு விரியும் நதியின் ஆழம்,
...முன்னேறிச் செல்லும் பாதையில்
வேகமாக கடக்கும் மரங்கள்,
தாயின் தாலாட்டுக்குப் பிறகு
ரயிலின் தாலாட்டில் சுகமாய் 
குழந்தையின் உறக்கம்,
தூரத்தில் விரியும் வயல்வெளியில்
நடனமாடும் மயிலின் தொகை,
இயல்பிலிருந்து விடுபடு இதைபோல

ஆச்சரியங்களை அடிக்கடி சுமந்தபடி.-    சியாமளா



கால வேதத்தில்கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்....

முந்தைய காலத்தில் மேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதிக் காரர்களை நடத்துவதைவிட, பணக்காரர்-ஏழையை நடத்துவதைவிட, எஜமான்-அடிமையை நடத்துவதைவிட மோசமாக  பெண்களை பிறப்பு முதல் இறப்பு வரை அடிமையாகவும் கொடு மையாகவும் நடத்தினார்கள்.

சிறுவயதில் தந்தைக்கும், திருமணமான வுடன் கணவனுக்கும், வயது முதிர்ந்த நிலையில் மகனுக்கும் கட்டுப்பட்டவளாக பெண் இருக்க வேண்டும் என்பது கொடுமை அல்லவா? 
பெண்களை அடிமைத்தளையிலிருந்து விலக்கி அவர்களுக்கு சுதந்திர உணர்ச் சியும், உலக ஞானமும், கல்வி அறிவும், கூட்டு வாழ்வில் சமபொறுப்பும் ஏற்படும்படிச் செய்து விட்டோமேயானால் மனித சமூகத் தின் நன்மைக்கு செய்ய வேண்டிய காரியங் களில் பெரும்பாகத்தையும் செய்தவர்கள் ஆவோம்.


பெண்கள் வியாதியஸ்தர்களாய் ஆவ தற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற் கும், ஆயுள் குறைவதற்கும் இந்தக் கர்ப்பம் என்பதே முலகாரணமாக இருக்கின்றது.... பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று பெண்கள் கருதுவதால் சுதந்திரமும், வீரமும் இன்றி அடிமையான காரியங்களுக்கு ஆளாகிறார்கள்....

`ஆண்மையின் கொடுமையிலிருந்து மட்டுமல்லாது பெண்கள் தாய்மையின் கொடுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும். 

ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிக் காரனாய் இருப்பதனாலேயே தான் யோக்கி யமாகவும், சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாகி விடுகிறான். 

ஆணாதிக்கச் சூழலும், பழைமைவாதி களும், புராண-இதிகாச விரும்பிகளும், வேத படைப்பாளர்களும்,  பெண்களின் இருப்பை மறுத்தவர்கள்தாம். பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு அர்ப் பணிக்க வேண்டிய கடமையே என்று உறுதிப் படுத்தினர். பெண்களின் கோபத்தைக்கூட ஊடல் என்று உருக்குலைத்தார்கள். பெண் களையும், பெண்களின் உறுப்புகளையும் அழகின் அடையாளம் என்றார்கள்.

தன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால், அவளைத் தனக்கே உரிமை யாக்கிக் கொள்ளவும் அவளைத் தன்னை யன்றி வேறு புருஷனை நாடாமல் இருக்கும் படிச் செய்யவும் நிர்ப்ப்பந்தம் செய்தனர்.

ஆணுக்கும் `சாந்தம்,`மென்மை போன்ற குணஇயல்புகள் தேவையானவையே; பெண்ணுக்கும் `வீரம், `துணிச்சல் ஆகியவை இயற்கையான குணங்களே. பிள்ளை பெறுகின்ற உடலமைப்பைப் தவிர பெண்ணுக்கும், ஆணுக்குமிடையே வேறெந்த பாகுபாடும் இல்லை. பெண்களின் உயிரியல் வேறுபாடுகளை வைத்து அவர்களுக்கு பாலியல் தன்மை கற்பிக்கப்படுவது மிகவும் தவறான ஒன்றாகும்.
திருமண முறை

பெண்களை ஒரு பொருளாகக் கருதி `ஒருவருக்குக் கொடுப்பது என்கின்ற முறை ஒழிய வேண்டும் . பெண்களை நாம் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடி வாழச் செய்வது தான் கடமை. 

நமது நாட்டில் நடக்கும் திருமணமுறை பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கும் சூழ்ச்சி . புருஷன்-மனைவி சம்மந்தமே, எஜமான்-அடிமை சம்பந்தமேயொழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்புமுறை சம்பந்தமோ அல்ல! 

பெண்ணுரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென் பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் . ஓர் ஆணுக்கு என்னென்னவெல்லாம் உரிமை களாக உள்ளதோ-அத்துணையும் பெண் ணுக்கும் உண்டு. 
கற்பு

`கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது.  `கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்பட வில்லை..? `கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண்மக்களை உலகம் முன்னேற்ற மடையச் செய்ய முடியாது. 
புருஷன்-மனைவி, கற்பு, பிள்ளைப் பேறு, போலவே விதவை, விபச்சாரம் என்பனவும் கூட பெண் அடிமைத்தனத்தை உறுதி செய்யும் கருத்தாக்கங்களே. மனைவியை இழந்த ஆண் `விதவன் என்றோ விலை மகளிரிடம் செல்லும் ஆண் `விபச்சாரன் என்றோ ஏன் குறிப்பிடப்படுவதில்லை..? 

தந்திர ஏற்பாடு....

ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதின் கருத்தே பெண் களை அடிமையாக்கவும், அடக்கிப் பய முறுத்திவைக்கவும் செய்த தந்திரமே ஆகும் என்றும், காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு, அவைகளில் உலோகங்களை மாட்டிவைப்பது, மாடுகளுக்கு மூக் கணாங்கயிறு போட்டதால் அது எப்படி இழுத்துக்கொண்டு ஓடாமல், எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில், மூக்கில் ஓட்டைகளைப் போட்டு ஆணிகள் திருகி இருப்பதால், ஆண்கள் பெண்களைப் பார்த்து கை ஓங்கி னால் எதிர்த்து அடிக்க வராமல் இருக்க, எங்கே காது போய் விடுகிறதோ, மூக் கறுந்து போய் விடுகிறதோ என்று தலை குனிந்து முதுகைக் காட்டத் தயாராய் இருப்பதற்காகவே அது உதவுகிறது என் றும் பெண்களின் அணிமணிகள் ஆசை யையும், அதனை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் ஆண்களின் மனோபாவமும் கண்டிக்கத்தக்கது.

நகை என்பது பெண்உரிமைக்குப் பூட்டப்பட்டிருக்கின்ற பொன்விலங்கு என்பதைப் பெண்இனம் மறக்கக் கூடாது. 

பெண்களின் ஆசையிலும், வாழ்க்கை லட்சியத்திலும் தலைகீழான புரட்சி ஏற்பட வேண்டும். ஆண்கள் செய் கின்ற எல்லா வேலைகளுக்கும் பெண்கள் தங்களைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆண்களைப் போன்று துணிவாக நடந்துகொள்ள வேண்டும். பெண்கள் தனியாக வாழமுடியும், எதனை யும் சாதிக்கமுடியும் என்கின்ற நிலைக்கு வரவேண்டும். சுதந்திரமாக, கவலையற்று வாழ, தொல்லையற்று வாழ அறிவைக் கொண்டு சிந்தித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.  

கால வேதத்தில் இவை எல்லாம் அனைவரும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.எனவே ஒவ்வொரு பெண்ணையும் சக மனுஷியாக பார்க்க வேண்டும்..

Wednesday, 21 August 2013

காலம் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப்பாடம்

நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கும்  நேரம் அறுதியிட்டு சொல்ல முடியாதது...நாம் சில நாட்கள் குழந்தையாக இருக்கிறோம்...பின் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறோம்..பின்னர் பணத்தை நோக்கி ஓடுகிறோம்..பணத்துக்காக உடல் நலத்தை இழக்கிறோம்... இழந்த நலத்தை பெற எல்லா பணத்தையும் இழக்கிறோம்...இப்படி முடிவில்லாமல் ஓடுவதை விட, பிறந்த பயனை பிறர்க்கு  நாம் அளிக்கும் போது தான் நமது கடமை முடிவடைகிறது...கட்மையை செய்யும் போது நாம் மற்றவர்களின் உணர்வினை புரிந்து கொள்கிறவர்கள் ஆகிறோம்..நம்மை பார்த்தே நமது  பிள்ளைகளும் பாடம் கற்றுக் கொள்கிறார்கள்..

காலதேவன் நமக்கு கொடுத்து இருக்கும் அழகான குடும்பத்தையும்,குழந்தைகளையும் விட்டு விட்டு கடமையை தட்டி கழிப்பவர்களுக்கு அவனது நீதிமன்றத்தில் கடுமையான தண்டனை உண்டு...

Monday, 19 August 2013

இந்த வேதம் காலத்தை அடிப்படையாக கொண்டது  எனக்  கூறலாம்....மதம் என்பது காலாகாலமாக மனிதனை 'மதம்' பிடிக்க வைத்ததே அன்றி வேறொன்றும் செய்யவில்லை...ஆனால் இது காலதேவனின் வேதம்....காலத்தை வீணடிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பதை உணரவைக்கும் வேதம்...
எவன் ஒருவன் கடமையில் இருந்து தவறி காலத்தை வீணடிக்கின்றானோ,அவனுக்கு கடமையை செய்யும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது கால தேவனால்..

21 வயதிற்குள் இந்த வேதத்தை கற்று தேர்ந்தால் தான் உன் வாழ்வில் காதல் மற்றும் குடும்பம் போன்ற முக்கியமான அம்சங்கள் வர வேண்டும்...அதற்கு முன் காதல் மற்றும் கல்யாணம் இவற்றில் அடியெடுத்து  வைத்தால் கடமையை பண்ண முடியாது. தீய பழக்கங்கள் உன்னை அறியாமல் ஆட்கொள்ளும்.....வாழ்க்கை நரகமாகும்..
பேதை மனிதனே, கடமையை செய்து வாழ்வதில் தானே இன்பம்..எனவே ஒரு கால கட்டம் வரை கற்றுதேர்ந்து,அப்புறம் இனத்தை விருத்தி செய்வாயாக....அதற்கு பின் உன் சந்ததி வாழ வழி செய்து அவ்ர்கள் இனப்பெருக்கம் செய்து கடமையை செவ்வனே செய்கிறார்களா என உன்னிப்பாக கவனிக்க தவறாதே....உன் ஆன்மாவுக்கு இறப்பே கிடையாது...மூளைக்கு தான் இறப்பு உண்டு...

நமது மனதில் காலம் என்பதை பொதுவாக மூளையில் பதிந்த சிந்தனைகளே என்று நினைக்கிறோம்....ஆனால் அது இறந்தகாலம் என்பதால்   'இறந்தது' என்றே பொருள்படும்..எனவே இறந்த காலத்தை நினைத்து நிகழ்காலத்தை தவற விடுவது முட்டாள்தனம்...அந்த ஊசலாடும் நினைவுகளில் இருந்து முதலில் வெளியில் வர வேண்டும்...கட்மையை செய்ய நம்மை தயார் படுத்த வேண்டும்...இறந்த காலத்துக்கும்,எதிர்காலத்துக்கும் நடுவில் மனம் ஊசலாடுவது நமக்கு சிற்றின்பமாக தெரிகிறது....அதனால் நாம் செய்ய வேண்டிய க்டமையில் இருந்து தவறுகிறோம்..
பல ஆத்திகர்களும், 'நாங்கள் உண்மையான ஆத்மாவை அறிந்து விட்டோம்' என செருக்குடன் திரிகிறார்கள்..அவர்கள் அனைவரும் தங்கள் செய்ய வேண்டிய கட்மையில் இருந்து உண்மையில் பிறழ்ந்தவர்களே...
ஒரு திரைப்பட பாடல் ஒன்றிலே. 
"பிறக்கின்ற போதே, இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய் தானே..
ஆசைகள் என்ன,ஆணவம் என்ன...
உறவுகள் என்பது பொய்தானே...
உடம்பு என்பது உண்மையில் என்ன, கனவுகள் வாங்கும் பை தானே...
தூக்கத்தில் பாதி,ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்...?
பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்..."

என நிதர்சனமான உண்மையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருப்பார்கள்...